தீவகம் ஒரு வரலாற்று நோக்கு.
இலங்கையின் வடமேற்கு யாழ்ப்பாணக் குடாநாட்டின் தென்மேற்கே அமைந்துள்ள தீவுத் தொகுதியே தீவகம் என அழைக்கப்படுகின்றது. மண்டைதீவு, வேலணைத்தீவு, புங்குடுதீவு, நயினாதீவு, அனலைதீவு, எழுவைதீவு, நெடுந்தீவு, காரைதீவு ஆகிய மக்கள் குடியிருப்பினைக் கொண்டிருக்கும் எட்டுத்தீவுகளையும் கண்ணாத்தீவு, பாலைதீவு, கற்கடகத்தீவு, நரையான்பிட்டி, சிறுத்தீவு, கச்சதீவு, போன்ற மக்கள் வாழாத தீவுகளையும் உள்ளடக்கிய தீவுக்கூட்டங்களை தீவாகத்திற்குள் அடக்கலாம். தீவுகப் பிரதேசமானது பல்லாண்டு காலமாக பௌதீக தன்மையில் வேற்றுமையில் ஒற்றுமைத் தன்மையைக் கொண்டிருக்கின்றது. இத்தகைய பண்புகளைக் கொண்டிருக்கும் தீவகப்பகுதிகள் நான்கு நிர்வாகப் பரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. நெடுந்தீவு, தீவகப்பகுதி வடக்கு, தீவகப்பகுதி தெற்கு, காரைதீவு என்பனவாகும். வேலணைத்தீவையும், மண்டைதீவையும் ஒரு தீவாக அழைப்பதனால் தீவுப்பகுதிகளை சப்த தீவுகள் என்று அழைப்பது வழக்கம். தீவகப் பகுதியின் வரலாற்றுத் தொன்மையினையும் அதன் சிறப்பினையும் இலக்கிய, தொல்லியல் சான்றுகள் ஊடாக அறிய முடிகின்றது.