சேது நாணயம் |
பெரும்பாலான கல்வெட்டுக்களில் 'சிவ'என்பதுமக்களின் இயற்பெயராக வருகின்றது. மேலும் அரசர், இளவரசர், வணிகர், கிராமவாசிகள், கிராமிய வட்டதில் உள்ள தலைவர்கள், கஹபதி எனும் குடும்பத்தலைவர்
முதலானோர் சிவ என்ற பெயரை கொண்டிருந்தனர் எனவே சிவனை போற்றி வழிபடும் மனப்பாங்கு உடையவர்கள் நாட்டின் பல பாகங்களிலும் வாழ்ந்தனர் என்று கொள்ளலாம். பல இனங்களை சேர்ந்தவர்களும் பல சமூகப்பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் சிவனை வழிபடும் வழக்கம் உடையோராய் விளங்கினர் என்று கருதலாம். பெருங்கற்கால பண்பாட்டிற்குரிய மட்பாண்ட துண்டுகளிலே சிவசின்னமாகிய திரிசூலம் காணப்படுவதால் சிவனை வழிபடும் வழக்கம். பெருங்கற்காலப்பண்பாட்டின் செல்வாக்கு இலங்கையில் பரவியதன் காரணமாக ஏற்றபட்டது எனக் கருதலாம்.
அவ்விதம் புரதான கால இலங்கையிலே சைவ சமயம்
குறிப்பிடத்தக்களவில் செல்வாக்குப் பெற்றிருந்தது என்பதற்கு புராதனமான நாணயங்கள்
சான்றாய் உள்ளன அவற்றிலே சிவ சின்னங்களான இடபம், நந்திபாதம்,
இலிங்கம், திரிசூலம் என்பன காணப்படுகின்றன அவற்றுள்
காளையின் உருவம் பொறித்த நாணயங்கள் குறிப்பிடத்தக்கவை அவ்வகை நாணயங்கள்
அனுராதபுரம்,
கந்தரோடை, வல்லிபுரம், யாழ்ப்பாணம்,
பூநகரி போன்ற
இடங்களில் கிடைத்துள்ளன. தென்னிலங்கையில் அக்குறுகொட எனும் இடத்தில் காளை உருவம்
கொண்ட நாணயங்களை உற்பத்தி செய்வதற்கு பயன்படுத்திய சுடுமண் அச்சுக்கள் கிடைத்தவை
குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் வெளியிடப்பட்ட எழுத்து பொறிப்புள்ள
நாணயங்கள் சிலவிற்றில் சிவ எனும் பெயர் காணப்படுகிறது இதை வெளியிட்டவர்கள் சிவ
வழிபாட்டுடன் தொடர்புடையவர்களாக இருக்கலாம் என்பதற்கு தென்னிலங்கையில் கிடைத்த
நாணயத்தின் முன் புறத்தில் சிவனுக்குரிய நந்திபாதமும் நாணயத்தின் பின்புறத்தில்
ஸிவக எனும் பெயரும் காணப்படுவதிலிருந்து கண்டுகொள்ள முடிகிறது. தென்னிலங்கையில்
கிடைத்த கி.மு 2ம் நூற்றாண்டுக்குரிய நாணயம் ஒன்றில்
சிவசின்னம் காணப்படுவதற்கான சான்று காணப்டுகிறது இன் நாணயம் 2.41 கிராம் நிறையும் 17மில்லிமீற்றர் விட்டமும் உடையது இதன்
முன்புறத்தில் நிற்கும் நிலையில் மனித உருவம் உள்ளது இதன் கையில் வேல், அம்பு, இருப்பதாக குறிப்பிடப்பட்ள்ளது ஆனால் அதில் ஒன்று திரிசூலம் என்பது தொளிவாக
தெரிகின்றது நாணயத்தின் பின்புறத்தில் திரிசூலம் போன்ற குறியீட்டை சுற்றி ஆறு
எழுத்துக்களில் 'மலகதிசஹ'என்ற பெயரும் உள்ளது இவ்வகையில் இன் நாணயம் சிவ வழிபாட்டிற்குரிய தொன்மையினை
எடுத்துக்காட்டுவதாக அமைகின்றது.
சிவ வணக்கத்தின் தென்மையினை
எடுத்துக்காட்டுவதில் தமிழர்கள் வெளியிட்ட பண்டையகால நாணயங்களுக்கு முக்கிய
பங்குண்டு இதற்கு வடஇலங்கையில் உடுத்துறையில் கிடைத்த நாணயம் தனிச்சிறப்பு
வாய்ந்தது. இது 2.5cm 1.4 cm நீள அகலமுடைய நீள்சதுர நாணயமாகும் செப்பும் ஈ;யமும் கலந்து பார்க்கப்பட்ட இந்நாணயத்தில்
நிற்கும் நிலையில் ஓர் ஆணின் உருவம் காணப்படுகிறது இதே வடிவமைப்புடைய லக்சுமி
நாணயங்களில் பெண் உருவம் இடம்பெற இந்நாணயத்தில் ஆண் உருவம் அமைவு பெற்றுள்ளமை
சிறப்பு வாய்ந்த அம்சமாகும். பெண் உருவ நாணயங்களில் சிவனுக்குரிய திரிசூலம், நந்தி, லிங்கம்,
போன்ற சின்னங்கள்
காணப்படுகின்றன ஆனால் இந் நாணயத்தில் பெண் தெய்வத்திற்கு பதிலாக ஆண் உருவம்
பொறிக்கப்பட்டிருப்பதால் இவ் உருவம் சிவனை குறிப்பது என கொள்வது பொருத்தமாக
தெரிகிறது.
மேலும் தென்னிலங்கையிலும், வடஇலங்கையிலும் கண்டுபிடிக்கப்பட்ட கி.மு 2ம் நூற்றாண்டிற்கும் கி.பி 2ம் நூற்றாண்டிற்கும் இடைபட்ட காலத்தில்
வெளியிடப்பட்டதாக கணிப்பிடப்பட்டுள்ள ஈய நாணயங்கள் சிலவற்றில் ஆட் பெயர்களுடன்
அவர்கள் பின்பற்றிய மதத்தின் சின்னங்களும் காணப்படுகின்றன. அவற்றுள் 'சிவ','சிவக'என்ற பெயர் பொறித்த நாணயங்கள் சிறப்பாக
குறிப்பிடத்தக்கன. இப்பெயர்கள் சமகால கல்வெட்டுக்களை போல் சிவ வழிபாடு
முக்கியத்துவம் பெற்றிருப்பதற்கு மேலும் சான்றாகும். இவற்றால் அறியப்படும் சமய
நம்பிக்கைகள் நாணயங்கள் வெளியிட்டவர்களை மட்டுமின்றி அவர்கள் ஆட்சிக்குட்பட்ட
மக்களின் அல்லது அவர்களை சார்ந்த சமூகத்தின் சமய நம்பிக்கையையும் பிரதிபலிப்பதாக
எடுத்து கொள்ளலாம் மேலும் நாணயங்களில் வரும் பெயர்கள் பெரும்பாலும் 'சிவ'வழிபாட்டுடன் தொடர்புடையது என்பதற்கு தென்னிலங்கையில் அக்குறுகொட என்ற
இடத்தில் கிடைத்த நாணயத்தில் 'சிவ'
என்ற பெயருடன்
சிவனின் சின்னமான நந்தி பாதமும் பொறிக்கப்பட்டுள்ளமை சான்றாகும். இதே காலப்பகுதிக்குரிய 'சிவ'என்ற பெயர் பொறித்த வெள்ளி நாணயம் ஒன்று
அண்மையில் கந்தரோடையிலிருந்தும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. (கிருஸ்னராசா 1998).
சிவ வழிபாட்டின் முக்கியத்துவத்தை
எடுத்துக்காட்டுவதில் பூநகரியில் சில சான்றுகள் கிடைத்துள்ளன. இங்கு வட்டமான
செப்பு நாணயத்தில் மன்னன் உருவம், பின்புறத்தில் இரு மனித உருவங்கள் இடையில் கைபிடியுடன் கூடிய சூலம்
காணப்படுகின்றது. இந் நாணயத்தில் சிறப்பாக கவனிக்கத்தக்க அம்சம் இந்திய
நாணயங்களில் வரும் சூலத்திற்கு கொடுக்கப்படாத முக்கியத்துவம் இச்சூலத்திற்கு
கொடுக்கப்பட்டு அது நாணயத்தின் மையத்தில் பொறிக்கப்பட்டிருப்பதாகும். இதிலிருந்து
இந் நாணயத்தை வெளியிட்ட தமிழ் மன்னன் சிவ வழிபாட்டில் கொண்டிருந்த ஈடுபாடு
தெரிகிறது.
பண்டைய தமிழ் நாணயங்களில் வரும் சிவனுக்குரிய
சின்னங்களுள் சிவலிங்கம் சிறப்பாக குறிப்பிடத்தக்கது. இதுவே சிவலிங்கங்களுள் மிக
தொன்மையானது என கூறப்படுகிறது. இது குணம், குறிகள்,
கடந்த பேரொளியாகிய
சிவனை ஒரு குறியில் கண் வைத்து வழிபடும் பொருட்டு தோன்றிய குறியீடு ஆகும்.
(சிவகுருநாதப்பிள்ளை 1991)
இச்சின்னத்தை
லட்சுமி உருவம் பொறித்த நாணயங்களில் சிலவற்றை சிறப்பாக காணலாம.; இந்நாணயத்தின் பின்புறத்தில் சுவஸ்;திகா சின்னமும் இதற்கு இடப்புறமாக காளையும்
வலப்புறமாக ஆவுடையாருடன் கூடிய லிங்கமும் காணப்படுகிறது.(புஷ்ப்பரட்ணம் 1998) சில நாணயங்களில் இலிங்கத்துக்கு பதிலாக பூரண
கும்பமும் வேறு சில நாணயங்களில் சிவனுக்குரிய திரிசூலமும் மழுவும் காணப்படுகின்றன.
இவை இரண்டும் சிவனுக்குறிய படைத்தலங்கலாகும். புறநானூறு சிவபிரானை 'ஏற்றுவன் உயரிய எரிமருள் அவிர்சடை
மாற்றருங்கணிச்சி மணிமி பற்றோன் என்றும் சீற்றம் நிறைந்த கூற்றம் என்றும் ஒரே கணை
கொண்டு முப்புரத்தை எரித்து அமரர்க்கு வெற்றி தந்த கறை மிடற்று அண்ணல்'என்றும் கூறுகிறது. மேற்குறிப்பிட்ட நாணயத்தில்
வரும் சிவலிங்கத்தை தவிர பிற்காலத்தில் வெளியிடப்பட்ட தமிழர் நாணயங்களில்
இச்சின்னம் பொறிக்கப்பட்டதுக்கு சான்றுகள் கிடைக்கவில்லை. கி.மு 2,1 நூற்றாண்டை சேர்ந்த தென்னிலங்கையில்
கண்டுபிடிக்கப்பட்ட நாணயம் ஒன்றின் முன்புறத்தில் சிவலிங்கம் இருப்பதாக
இந்நாணயத்தை கண்டுபிடித்த ஆசிரியர் சேயோன் குறிப்பிடுகின்றார். ஆனால் அதை ஸ்ரீவத்ஷா எனக்கூறுவதே பொருத்மானதே (புஷ்பரட்னம் 2001) வசவ மன்னனுடைய நாணயம் ஒன்றில் சதுர வடிவமான
நாணயத்தின் உள்ளே பெட்டி வடிவம் மற்றும் நந்தியின் உருவம் மற்றும் கும்பம்
என்பனவும் காணப்படுகின்றது.
சிந்து வெளி முத்திரை |
வரலாற்று ஆசிரியர்கள் பலரும் ஈழத்தமிழரிடையே
நாணயங்களும்,
நாணயங்களில்
நந்தியை பொறிக்கும் மரபும் கி.பி 13ம் நூற்றான்டின் பின்னரே ஏற்பட்டதென கூறிவந்துள்ளனர். ஆனால் அண்மைக்கால
ஆய்வுகளில் இருந்து அவர்கள் கி.மு 3ம் நூற்றாண்டில் இருந்து நாணயங்களை வெளியிட்டு வந்ததற்கும் அவற்றின் நந்தியை
பொறித்ததற்கும் உறுதியான சான்றுகள் கிடைத்துள்ளன. இதில் சிறப்பாக குறிப்பிடத்தக்க
அம்சம் சமகால தமிழக நாணயங்களில் குறிப்பாக சங்ககால நாணயங்களில் பெரும்பாலும்
நிற்கும் நிலையில் காளை உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஈழத்தில் வெளியிடப்பட்ட
நாணயங்களில் அவை அமர்ந்த நிலையிலும், நிற்கும் நிலையிலும் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த அம்சத்தை கி.பி 5ம் நூற்றாண்டு வரை புலக்கத்தில் இருந்த
நீள்சதுர நாணயங்களிலும் காணமுடியும். இந்நாணயங்களின் முன்புறத்தில் அமர்ந்த அல்லது
நிற்கும் நிலையிலும் பெண் உருவம் காணப்படுகின்றது நாணயத்தின் பின்புறத்தின்
மத்தியில் பீடத்துடன் கூடிய சுபஸ்த்திகாவும் அதற்கு இடப்புறமாக அமர்ந்த நிலையில்
தத்துருவமாக வடிவமைக்கப்பட்ட நந்தியும் காணப்படுகின்றது. இந் நாணயத்தில் வரும் பெண் உருவமும், நந்தியும் சிவ சக்தி வழிபாட்டை பிரதிபலிப்பதாக
எடுத்துக்கொள்ள இடமுண்டு மேலும் கி.மு 1ம் நூற்றாண்டிற்கு முன்னர் அனுராத புரத்தில் ஆட்சி புரிந்த தமிழ் மன்னர்கள்
வெளியிட்டதாக கருதப்படும் சதுரவடிவிலமைந்த செப்பு நாணயங்களில் முன்புறத்தில்
பூரணகும்பம் அல்லது பலிபீடம் போன்ற சின்னத்திற்கு முன்னால் நிற்கும் நிலையில் காளை
உருவம் காணப்படுகிறது. (புஷ்ப்பரட்ணம் 2001)
நாணயங்களில் சிவ சின்னங்களை பொறிக்கும் மரபை யாழ்ப்பாண அரசர்கள் ஒரிசாவில்
உள்ள கலிங்க வம்சத்து மன்னர்களிடமிருந்தே பெற்றனர் என்ற கருத்துண்டு ஆனால் மேற்கூறப்பட்ட
சான்றுகள் இம்மரபு ஈழத்திலே பண்டயகாலத்தில் தோன்றியதை காட்டுகின்றன.இதில் சிறப்பாக
கவனிக்கப்பட வேண்டிய அம்சம் யாழ்ப்பாணத்து அரசர்களான ஆரியச்சக்கரவர்த்திகள் 13ம் நூற்றாண்டில் நல்லூரில் அரசமைப்பதற்கு
முன்னர் வட இலங்கையில் ஆட்சிபுரிந்த மன்னர்களும் சிவனுக்குரிய நந்தியையே முன்னர்
தமது நாணயங்களில் முக்கிய சின்னமாகப்பொறித்துள்ளனர். அதேவேளை யாழ்ப்பாணதரசர்
நாணயங்களில் நந்தியின் முக்கியத்துவம் கூடிக்குறைந்து காணப்படுகின்றது. ஆனால்
இதற்கு முன்னர் வடஇலங்கையில் வெளிடப்பட்ட நாணயங்களில் நந்தியே முக்கிய சின்னமாக
இடம்பெற்றுள்ளது.
இலங்கையில் கிடைத்து வரும் பண்டையகால
நாணயங்களில் காளை உருவம் பொறித்த சதுர நாணயங்கள் சிறப்பாக நோக்கத்தக்கன அண்மையில்
தென்னிலங்கையில் உள்ள அக்குறுகொட என்ற இடத்தில் இவ்வகை நாணயங்கள் சிலவற்றிற்குரிய
சுடுமண் அச்சுக்கள் கிடைத்துள்ளன இவற்றிலிருந்து இந்நாணயங்கள் இலங்கையிலே
வார்க்கப்பட்டது என்பதனை உறுதிப்படுத்த முடிந்தது. அண்மையில் பூநகரியில்
(புஷ்பரட்ணம் 1998)
கிடைத்த நாணயங்கள்
மற்றும் அனுராதபுரம்,
கந்தரோடை, வல்லிபுரம், யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் கிடைத்த நாணயங்கள் உறுதிப்படுத்துகின்றன.
காளை உருவத்தில் பயன்படுத்தும் மரபு இலங்கையில் கி.மு 3ம் நூற்றாண்டில் இருந்து ஏற்பட்டிருக்கலாம்
என்பதற்கு தென்னிலங்கையில் சான்றுகள் கிடைத்துள்ளன. இதற்கு 15க்கும் மேற்பட்ட காளை உருவ நாணயங்களை
வடிவமைப்பதற்குரிய சுடுமண் அச்சுக்களும் சுடுமண் முத்திரைகளும் கிடைத்துள்ளன. இவ்வகையில்
பண்டையகாலம் தொட்டே நாணயங்களில் காளை உருவம் செல்லாக்குப் பெற்றதனை
காணமுடிகின்றது. இவ்வகையில் சிவ வழிபாட்டின் தொன்மையினை நாணயங்களின் ஊடாக
காணமுடிகின்றது. கி.பி 6
தொடக்கம் 9ம் நூற்றாண்டிற்கு இடைப்பட்டதாக கருதப்படும்
சதுர நாணயங்கள் சிலவற்ற'pல் முன் புறம் அமர்ந்த அல்லது நிக்கும்
நிலையில் காளை உருவமும் பின்புறத்தில் இரு குத்துவிளக்கு இடையில் தனி ஒரு மீன்
சின்னமும் காணப்படுகின்றன சில நாணங்களில் முன்புறம் காளையும் பின்புறம் யானையும்
குதிரையும் காணப்படுகின்றன.
முல்லைத்தீவில் கிடைத்துள்ள நாணயங்களில் வரும்
உருவத்தை பாக்கர் கடவுளே சிவன் எனக் கொள்கின்றார். காரணம் இந்நாணயத்தில் எருது
போன்ற சின்னங்கள் காணப்படுகின்றன. எருது கூட படுத்திருப்து போன்று சித்தரித்து
காணப்படுவதை நோக்கும்போது இவை சிவனையும் அவரது வாகனத்தையும் சித்தரிக்கின்றன எனக்
கொள்ளலாம். இதனை உறுதி செய்வது போன்று நிற்கும் நிலையில் உள்ள இவ்உருவம் சில
நாணயங்களில் முற்பக்கத்தில் இரு தலை, முத்தலை சூலத்தை கையில் ஏந்தி நிற்பதைப்போன்றும் காணப்பட மறு புறத்தில் சுபஸ்;திகா எருது இலையுடன் காணப்படும் கும்பம்
போன்றனவும் காணப்படுகின்றன. இந் நாணயங்களில் ஆண் தெய்வம் மட்டும் அல்லாது பெண்
தெய்வமும் சித்தரிக்கப்பட்டுள்ளது. பெண்ணின் உருவமும் பிற்பக்கத்தில் சுவஸ்திகா படுத்திருக்கும் எருது இலையுடன்
காணப்படும் கும்பமும் காணப்படுகின்றன. இவை சிவனின் மனைவி ஆகிய பார்வதியை
குறிப்பனவாக இருக்கலாம் பாக்கர் இத்தகைய நாணயங்கள் அனுராதபுரத்தில் உண்டு என்றும்
கூறியுள்ளார்.
அனுராதபுர நாணயங்களில் நிற்கும், இருக்கும் நிலையில் உள்ள ஆண் பெண் உருவங்கள்
காணப்படுகின்றன.இவற்றுள் இருதலை முத்தலை சூலங்களுடன்
காட்சிதரும் தெய்வம் சிவனே எனலாம். இவ்வகையில் அனுராதபுர நாணயங்களின் ஊடாக சிவ
வழிபாட்டின் தொன்மையை நோக்கமுடிகிறது. மேலும் கி.பி 10 தொடக்கம் 13 ம் நூற்றாண்டுகளிற்கு இடைப்பட்ட காலத்தில் வெளியிடப்பட்ட வட்ட நாணயங்களில்
முன்புறத்தில் பீடத்தின் மேல் இடம் அல்லது வலப்புறம் பார்த்த நிலையில் அமர்ந்த
காளையின் உருவமும் அதன் இருபுறமும் குத்துவிளக்கும் காளைக்கு மேலே சூரியனும், நாணயத்தின் பின்புறத்தில் பீடத்தின் மேல்
இரண்டு அல்லது மூன்று மீன் சின்னமும் அவற்றின் இரு புறமும் குத்துவிளக்கும்
காணப்படுகின்றன. இதில் முக்கிய சின்னமாக இடம்பெறும் காளையின் தோற்ற அமைப்பு
நாணயத்திற்கு நாணயம் வேறுபட்டதாக உள்ளன. (புஷ்ப்பரட்ணம் 1999) இந்த வேறுபாடுகள் காலமாற்றத்தை அல்லது பல்வேறு
மன்னர்களால் வெளிடப்பட்டது என்பதை காட்டுகின்றன. இவ்வகையில் கி.பி 10-13நூற்றாண்டுகளிலும் இலங்கையில் சிவ வழிபாடு
சிறப்புற்று இருந்தது என்பதனை நாணயங்கள் உறுதிதிப்படுத்துகின்றன.
கலிங்கமாகன் பொலநறுவையை கைப்பற்ற முன்னரே வடஇலங்கையில் ஒரு தமிழரசு இருந்தது
அக்காலத்தில் முன்புறம் அமர்ந்த நிலையில் காளை உருவமும் பின்புறம் இரு மீன்
சின்னங்களையும் கொண்ட நாணயங்கள் வெளியிடப்பட்டன என கூறலாம். இவை பல வடிவங்களில்
வேறுபட்ட சின்னங்களை கொண்டிருப்பதால் இக்காலத்தில் ஆட்சியிலிருந்த மன்னர்கள்
இவற்றை வெளியிட்டதாக கூறலாம். இவ்வகையில் அக்காலத்திலும் நாணயங்களில் நந்தியுருவம்
செல்வாக்குப் பெற்றதனை கொண்டு இங்கு சிவ வழிபாட்டின் தூய்மையை காணமுடிகின்றது.மேலும் வட இலங்கையில் நிலவிய சாவக மன்னனுடைய ஆட்சிக்காலத்தில் வெளியிடப்பட்ட
சில நாணயங்களில் முன்புறத்தில் நந்தியும் பின்புறத்தில் தேவநாகரீக எழுத்தில்
ஸ்ரீசாவக என்ற பெயரும் காணப்படுகின்றது. இந்நாணயத்தில் காணப்படும் முக்கிய அம்சம்
இவன் கால நாணயங்களிலும் நந்தியே முக்கிய சின்னமாக பொறிக்கப்பட்டிருந்ததாகும்
இதிலிருந்து இவன் ஆட்சியிலும் வடஇலங்கையில் சிவ வழிபாடு முக்கியத்துவம்
பெற்றிருந்தமை தெரிகின்றது.
சேது நாணயம் |
களஆய்வின்போது வடஇலங்கையில் சிங்கை நகர் கால
நாணயங்கள் என்ற வகையில் கி.பி 11-13 இடைப்பட்ட காலத்தில் வெளியிடப்பட்டதாக கணிக்கக்கூடிய சில வகை நாணயங்கள்
கிடைத்துள்ளன. இவற்றை சின்னங்களின் அடிப்படையில் இரு பெரும் பிரிவாக வரையறை
செய்துள்ளனர். முதலாவது பிரிவில் இடது அல்லது வலப்புறம் பார்த்த நிலையில்
பீடத்தின் மேல் அமர்ந்த நந்தி உள்ளது இதற்கு இருபுறமும் குத்துவிளக்கும் மேலே
பிறைச்சந்திரனும் காணப்படுகின்றன
இக்காலப்பகுதியிலும் சிவ வழிபாடு சிறப்புற்று விளங்கியமைக்கு இக்கால நாணயம்
சான்றாக அமைகின்றது.
இவ்வகையில் இலங்கையில் தோன்று தொட்டு தொன்மையாகவும் தொடர்ச்சியாகவும் இந்து சமயம் சிறப்புற்று இருந்தற்கு பல்வேறு பட சான்றுகள் உதவுகின்ற வகையில் நாணய சான்றுகளும் முதன்மையானது. நாணயங்களில் காணப்படும் சின்னங்களும் குறியீடுகளும் சமய செல்வாக்கினையே காட்டுகின்றன.
இவ்வகையில் இலங்கையில் தோன்று தொட்டு தொன்மையாகவும் தொடர்ச்சியாகவும் இந்து சமயம் சிறப்புற்று இருந்தற்கு பல்வேறு பட சான்றுகள் உதவுகின்ற வகையில் நாணய சான்றுகளும் முதன்மையானது. நாணயங்களில் காணப்படும் சின்னங்களும் குறியீடுகளும் சமய செல்வாக்கினையே காட்டுகின்றன.
உசாத்துணைகள்
1)
புஷ்பரட்ணம்,ப., (2001), இலங்கைத் தமிழரின்
பண்டைய கால நாணயங்கள், பவானி பதிப்பகம் ,
யாழ்ப்பாணம், ப – க 8 -73 108 -182.
2)
புஷ்பரட்ணம்,ப., (2003), தொல்லியல் நோக்கில்
இலங்கைத் தமிழர் பண்பாடு , பவானி பதிப்பகம் ,
யாழ்ப்பாணம், ப – க 94 – 108 , 197- 213.
3)
புஷ்பரட்ணம்,ப., (2002), தொல்லியல் நோக்கில்
ஈழத்தமிழரின் பண்டைய கால மதமும் கலையும் , குமரன் புத்தக இல்லம் , கொழும்பு –
சென்னை. ப – க 97 – 163.
4)
புஷ்பரட்ணம்,ப., ( இலங்கைத் தமிழரும் நாக நாட்டு
அரச மரபும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட் , சென்னை. ப – க 13 – 17 , 30 –
41.
5)
புஷ்பரட்ணம்,ப.,2003,ஈழத்தமிழரின் பண்டைய கால
நாணயங்கள் காட்டும் ஈழத்து இந்துமதம், இந்து தருமம்.ப – க 33 – 42.
\ கிருஷ்ணராசா,செ.,(1983),யாழ்ப்பாணக் குடாநாட்டில் கிடைத்த நாணயங்கள்,சிந்தனை1, ப – க 71- 84.
No comments:
Post a Comment