Pages

Thursday, June 15, 2017

இலங்கை புராதன நாணயங்கள் அடிப்படையில் வைணவ சமயம் ஓர் பார்வை

இலங்கையில் சைவ சமயத்தைபோல் விஷ்ணுவை பிரதான கடவுளாக கொண்ட வைணவ சமயமும் புரதான
விஷ்ணு
காலம் தொட்டு செல்வாக்குப் பெற்ற மதமாக இருப்பதற்கு பல்வேறு ஆதாரங்கள் காணப்படுகின்றன. வைணவ மதத்துக்குரிய ஆரம்ப கால சான்றுகளாக பாளி இலக்கியங்களிலும் பிராமிய கல்வெட்டுக்களிலும் வரும் செய்திகள் சான்றாக காணப்படுகின்றன
கல்வெட்டுகளில் இரு இடங்களில் விஷ்ணு என்ற பெயரும் வேறு சில கல்வெட்டுக்களிலும் ராம கோபா நாராய போன்ற பெயர்களும் காணப்படுகின்றன. இவற்றுள் வினு என்ற பெயர் விஷ்ணுவையும் மற்றய பெயர்கள் ராம கோபால நாராயண போன்ற விஷ்ணுவின் அவதாரங்களை குறிப்பதாக கூறப்படுகின்றது. கந்தரோடையில் கிடைத்த கி.பி 4ம் நூற்றாண்டிற்குரிய கார்ணியன் கல்மணி முத்திரை ஒன்றில் 'விஷ்ணு பூதிஸய'போன்ற வாசகம் காணப்படுகிறது இது விஷ்ணு வழிபாட்டுடன் தொடர்புடையதாக கருதப்படுகின்றது வைணவ சமயத்தின் தொன்மையையும் ஈழத்தில் அம்மதம் பெற்ற முக்கியத்துவத்தையும் எடுத்துக்காட்டுவதில் பண்டைய கால நாணயங்கள் சிறப்பாக ஆராயத்தக்கன.
நாணயங்களை பொறுத்தவரை விஷ்ணுவின் தேவியார் லட்சுமியாரும் அவருடன் தொடர்புடைய சின்னங்னகளுமே அதிகமாக காணப்படுகின்றன. தென்னிலங்கையிலும் வடஇலங்கையிலும் கிடைத்த பிராமி எழுத்துப் பொறித்த நாணயங்களிலும் ஸ்ரீவத்ஷா
லட்சுமி நாணயங்கள்
முக்கிய சின்னமாக காணப்படுகிறது. இதில் வளம்விருத்தி நீரின்சிறப்பு என்பவற்றை குறிக்கும் சின்னமாக கூறப்படுகிறது. வடஇலங்கையில் கந்தரோடையில் தென்னிலங்கையில் அக்குறுகொட என்ற இடத்திலும் கிடைத்த கி.மு 1ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட தமிழ் நாணயங்களில் லக்சுமியின் உருவம் நாணயத்தின் முற்பக்கத்தில் வார்ப்பு நிலையில் பொறிக்கப்பட்டுள்ளது.
சற்றுப்பெரிய  நீள்சதுர நாணயங்களின் தாமரை மீது நிற்கும் லக்சுமியின் இரு பக்கத்திலும் தாமரைக்கொடி உயர்ந்து செல்வதும் அதன் உச்சியில் அமர்ந்திருக்கும் இரு பக்க தாமரை மலர் மீது அமர்ந்திருக்கும் இரு யானைகள்; லட்சுமி மீது நீர் சொரிவதை போன்றும் காட்டப்பட்டுள்ளது இவ்வடிவத்தை பேராசிரியர் சிவசாமி ஸ்ரீசூத்தத்தில் வரும் கஜலட்சுமி வடிவத்தை அப்படியே நினைவு படுத்துவதாக கூறியுள்ளனர.; இவ்வகையில் வைணவ சமயத்தில் முக்கியத்துவம் பெறும் கஜலட்சுமி வழிபாடு இக்காலத்தில் சிறப்புப் பெற்றிருந்ததை காணமுடிகிறது.லட்சுமி வடிவத்துடன் நாணயத்தில் வரும் பிறசின்னங்களும் இங்கு சிறப்பாக குறிப்பிடத்தக்கன. இதில் வரும் யானைகள் இந்திரனுடைய ஐராவத்தத்தை குறிக்கின்றன. நாணயத்தில் வரும் தாமரை பல மதங்களுக்கும் பொதுவாக இருப்பதும் லட்சுமி வடிவத்துடன் வருவது சிறப்பாக நோக்கதக்கது. இந் நாணயத்துடன்
பீடத்துடன் கூடிய சுவஸ்திகா
வரும் சுபஸ்திகாவின் தோற்றம் ஹரப்பா நாகரிகத்துடன் தொடர்புபடுத்தப்படுகின்றது இது சூரியனை பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும் அதிஸ்டம் நீண்ட ஆயுளை குறிப்பதாகவும் கருதப்படுகிறது. ஆரம்ப காலத்தில் இந்து மதத்துடன் தொடர்புபடுத்தப்பட்ட இச் சின்னம் பிற்காலத்தில் பௌத்த சமண மதங்களுக்கும் உரிய சின்னமாக கருதப்படுகிறது.
லட்சுமி தெய்வத்தை நாணயங்ககளில் பொறிக்கும் மரபு பிற்காலத்திலும் தொடர்ந்ததற்கு கி.பி 10-11 ம் நூற்றாண்டில் வெளியிடப்பட்ட நாணயங்கள் சிறந்த சான்றுகள் ஆகும் இந் நாணயத்தின் பின் புறத்தில் தலையை இடப்புறம் திருப்பிய நிலையில் ஒரு மனித உருவம்காணப்படுகிறது. இதன் வலது கை மேலே உயர்த்தியவாறு பூரண கும்பம் போன்ற ஒரு பொருளை தாங்கியுள்ளது இதற்கு கீழே குத்துவிளக்கு காணப்படுகிறது தலைக்கு வலப்புறமாக சங்கு போன்ற உருவம் உள்ளது இதன் வலது கை கீழே நோக்கியவாறு வஷ்சிராயுதம் போன்ற பொருளை பிடித்துள்ளது நாணயத்தின் பின்புறத்தில் லட்சுமி என்ற பெயரும் மேற்புற விளிம்பை ஒட்டி சூரியனும் காணப்படுகின்றன. சில நாணயங்களின் சங்கும் சிறிய குற்றுக்களும் காணப்படுகின்றன இச்சிறிய குற்றுக்கள் முத்தை குறிப்பதாக நாணய வியலாளர்கள் கூறுகின்றனர.; மிச்சனர் என்ற நாணயவியலாளர் நாணயத்தின் முன்புறத்தில்; உள்ள உருவம் நிற்கும் நிலையில் உள்ள மன்னன் என கூறுகிறார் ஆனால் இதன் இடது கால மடிக்கப்பட்டு வலது காலைக் தொடுவதுடன் அமர்ந்த நிலையில் இருப்பது போன்ற தோற்றத்தில் உள்ளது. இதனால் இவ் உருவத்தை அமர்ந்த நிலையில் உள்ள லட்சுமியாக கூறலாம். இதை நாணயத்தில் வரும் லட்சுமி என்ற பெயர் மேலும் உறுதிப்படுத்துகிறது.
இவ்வகை நாணயங்கள் பெருமளவிற்கு வடஇலங்கையில் மாதோட்டம் அச்சுவேலி கந்தரோடை போன்ற இடங்களில் கிடைத்துள்ளன இவற்றை தவிர கொழும்பு சென்னை அருங்காட்சியகங்களிலும் காணப்படுகின்றன. இந்நாணயங்களில் வரும் பெரும்பாலான சின்னங்கள் வைணவ மதத்துக்கு உரியனவாக காணப்படுகின்றன. இந் நாணயத்தில் வரும் சங்கு வைணவ மதத்துடன் தொடர்புடையதாக இருப்பினும் அது வட இலங்கையில் பொருளாதார நடவடிக்கையில் பெற்ற முக்கியத்துவத்தையும் எடுத்துக்காட்டுவதாக கருத இடம் உண்டு. இதற்கு இந்நாணயங்களில் பொறிக்கப்பட்டுள்ள முத்துக்குரிய வடிவம் மேலும் ஒரு சான்றாக அமைகிறது. லட்சுமி பெரும்பாலும் பொருளாதார விருத்திக்குரிய தெய்வமாகவே வழிபடப்பட்டு வருகிறது.
தென்னிலங்கையில் கிடைத்த கி.மு 1ம் நூற்றாண்டிற்கு முற்பட்ட சில நாணயங்களில் ஆமை முக்கிய சின்னமாக காணப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் உடுத்துறை என்ற இடத்தில் கிடைத்த கி.பி 1ம் நூற்றாண்டிற்குரிய நாணயத்தின்; நாக என்ற பெயருடன் இரு குத்துவிளக்கிற்கு இடையில் மீன்சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது கி.பி 7-9ம் நூற்றாண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் வட இலங்கையின் இருந்த தமிழ் அரசால் வெளியிடப்பட்டதாக கருதப்படும் சதுர நாணயங்களில் முன் புறத்திலும் இரு குத்துவிளக்குகளுக்கிடையே மிகப் பெரிய அளவில் மீன் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது 10-13ம் நூற்றாண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் வெளியிடப்பட்ட சில வட்ட நாணயங்களின் முன்புறத்தில் தாமரைச் செண்டு சங்கு என்பவற்றுடன் கூடிய இரு மீன் சின்னமும் பின்புறத்தில் மூன்று  மீன் சின்னமும் காணப்படுகின்றன.
இந்நாணயங்களில் வரும் மீன் சின்னங்கள் எதைக்குறித்து நிற்கின்றது என்பதை உறுதியாக கூறமுடியாது. குல மரபுச்சின்னமாகவும் அரச லட்சணையாகவும் அதே வேளை சமய சின்னமாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது இவற்றை நோக்கும்போது மேற்குறித்த நாணயத்தில் வரும் மீன் சின்னம் என்ன நோக்குடன் பொறிக்கப்பட்டிருந்தாலும் அதற்கு சமய முக்கியத்துவம் கொடுக்கப்படடிருக்கலாம் என்பதில் சந்தேகம் இல்லை எவ்வாறு பீடத்தில் மேல் அமர்ந்த நந்திக்கு இரு புறத்திலும் குத்து விளக்கும் அதற்கு மேலே சூரியன பிறைச்சந்திரன் போன்ற சின்னங்களும் காணப்படுகின்றது. அவ்வாறே பெரும்பாலான நாணயங்களில் பீடத்தின் மேல் அமர்ந்த மீன் சின்னத்துக்கு இருபுறமும் குத்துவிளக்கும் மேலே பிறை சந்திரனும் சூரியனும் சில நாணயங்களில் சங்கும் காணப்படுகின்றன மீன் வைணவ சமயத்தில் விஸ்ணுவின் மச்ச அவதாரமாகக் கொள்ளப்படுகிறது. இது பிற்கால வைணவ கோவில்களில் சிற்பமாகவும் செதுக்கப்பட்டுள்ளது. நாணயங்களில் மீன் சின்னத்துடன் விஸ்ணுவை குறிக்கும் சங்கும் இடம்பெற்றுள்ளது. சங்கு விஸ்ணுவிற்குரிய இன்னுமொரு சின்னமாகும். இதனால் இந்நாணயங்ளை  வெளியிட்ட ஈழத்தமிழ் மன்னர்கள் வைணவ சமயத்தின் மீது அதிக பற்றுடையவர்களாக இருந்தனர் எனக் கூறலாம். பல நாணயங்களின் முன்புறத்தில் அமர்ந்த நந்தியுருவமும் பின்புறத்தில் இரு மீன் சின்னமும் காணப்படுகின்றன. இச்சின்னங்கள் இவற்றை வெளியிட்ட மன்னர்கள் அல்லது அவர்கள் ஆட்சிக்கு உட்பட்டிருந்த மக்கள் இடையே வைஸ்ணவ வழிபாடு நிலைபெற்றிருந்ததை எடுத்துக்காட்டுகின்றது.


பிந்திய அனுராதபுர காலத்திலே (கி.பி 6தொடக்கம் கி.பி 10ம் நூற்றாண்டுவரை) கஹபணு நாணயங்கள் காணப்படுகின்றன பொன், வெள்ளி, செம்பு, ஆகிய உலோகங்களில் இவை உள்ளன. இவை வட்ட வடிவமானவை இவற்றின் முன்பக்கத்தில் வேட்டி மேலாடை முடி தரித்து நிற்கும் மனித உருவம் காணப்படுகிறது. இவ் உருவம் தனது இடது கரத்தினை மடித்து சங்கு அல்லது தாமரை மலரை ஏந்தி நிற்கிறது இதன் வலது கரம் தொங்கியும் காணப்படுகிறது. இதன் அருகில் சில சமயம் ஒரு புறத்திலும் சில சமயம் இரு புறத்திலும் விளக்குள் காணப்படுகின்றன. இன் நாணயத்தின் பின்பக்கத்தில் இவ் உருவம் ஆசனத்தில் இருக்கும் பாவனையில் முன்பக்கம் போன்றே காணப்படுகிறது. இதேபக்கத்தில் 'வடஸ்ரீலங்கேஸ்வர' (ஈழத்தின் தலைவன்) என்ற வாசகம் நாகரிக எழுத்தில் காணப்படுகின்றன சிலர் இவ்வுருவம் ஈழத்தின் தலைவன் ஆகிய மன்னனை குறித்து நிற்கிறது என வாதிட்டாலும் கூட இதில் காணப்படும் சங்கு, சக்கரம், தாமரை போன்ற சின்னங்கள் இவ்வுருவம் திருமால் உடையதே என எண்ண வைக்கின்றன. திருமால் காத்தல்க்கடவுள். இத்திருமால் தான் சிங்கள நாட்டார் வழிபாட்டில் அன்று தொடக்கம் இன்று வரை முதன்மை பெற்ற முன்னணி கடவுளாக விளங்கும் உப்புல்லவன் ஆகும் இவ்வகையில் அனுராதபுர காலத்திலும் விஷ்ணு வழிபாடு பெற்றிருந்ததனை நாணயச்சான்றுகள் மூலம் அறிய முடிகிறது இக்கருத்தை உறுதி செய்வது போன்று இந்நாணயங்களின் அரைவாசி, கால்வாசி பாகங்களில் காணப்படும் லட்சுமி உருவம் அமைகின்றது. சிலவற்றின் முற்பக்கத்தில் லட்சுமி நிற்கும் நிலையிலே தாமரை ஆசத்தில் காணப்பட மறுபக்கத்தில் லட்சுமி என்ற வாசகம் நாரியில் உள்ளது. இவ்வகையில் இந் நாணயச்சான்று ஊடாக இக்காலத்தில் வைணவ சமயம் பெற்றிருந்த செல்வாக்கினை அறியமுடிகிறது.   
   

உசாத்துணைகள்

1)   புஷ்பரட்ணம்,ப., (2001), இலங்கைத் தமிழரின் பண்டைய கால நாணயங்கள், பவானி பதிப்பகம் ,  யாழ்ப்பாணம், ப – க 8 -73 108 -182.

2)   புஷ்பரட்ணம்,ப., (2003), தொல்லியல் நோக்கில் இலங்கைத் தமிழர் பண்பாடு , பவானி பதிப்பகம் ,  யாழ்ப்பாணம், ப – க 94 – 108 , 197- 213.


3)   புஷ்பரட்ணம்,ப., (2002), தொல்லியல் நோக்கில் ஈழத்தமிழரின் பண்டைய கால மதமும் கலையும் , குமரன் புத்தக இல்லம் , கொழும்பு – சென்னை. ப – க 97 – 163.

4)   புஷ்பரட்ணம்,ப., ( இலங்கைத் தமிழரும் நாக நாட்டு அரச மரபும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட் , சென்னை. ப – க 13 – 17 , 30 – 41.



5)   புஷ்பரட்ணம்,ப.,2003,ஈழத்தமிழரின் பண்டைய கால நாணயங்கள் காட்டும் ஈழத்து இந்துமதம், இந்து தருமம்.ப – க 33 – 42. 

No comments:

Post a Comment

உலக நாடுகளில் பாம்பு வழிபாடு

உலக நாடுகளில் பாம்பு வழிபாடு பண்டைக் காலமுதல் உலகின் பல பாகங்களிலும் பாம்பை வழிபாடும் வழக்கம் இருந்து வருகின்றது. பண்டைய மனித இனங்கள் தோன்...