Pages

Wednesday, November 7, 2018

தீவகம் ஒரு வரலாற்று நோக்கு.

தீவகம் ஒரு வரலாற்று நோக்கு.

இலங்கையின் வடமேற்கு யாழ்ப்பாணக் குடாநாட்டின் தென்மேற்கே அமைந்துள்ள தீவுத் தொகுதியே தீவகம் என அழைக்கப்படுகின்றது. மண்டைதீவு, வேலணைத்தீவு, புங்குடுதீவு, நயினாதீவு, அனலைதீவு, எழுவைதீவு, நெடுந்தீவு, காரைதீவு ஆகிய மக்கள் குடியிருப்பினைக் கொண்டிருக்கும் எட்டுத்தீவுகளையும் கண்ணாத்தீவு, பாலைதீவு, கற்கடகத்தீவு, நரையான்பிட்டி, சிறுத்தீவு, கச்சதீவு, போன்ற மக்கள் வாழாத தீவுகளையும் உள்ளடக்கிய தீவுக்கூட்டங்களை தீவாகத்திற்குள் அடக்கலாம். தீவுகப் பிரதேசமானது பல்லாண்டு காலமாக பௌதீக தன்மையில் வேற்றுமையில் ஒற்றுமைத் தன்மையைக் கொண்டிருக்கின்றது. இத்தகைய பண்புகளைக் கொண்டிருக்கும் தீவகப்பகுதிகள் நான்கு நிர்வாகப் பரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. நெடுந்தீவு, தீவகப்பகுதி வடக்கு, தீவகப்பகுதி தெற்கு, காரைதீவு என்பனவாகும். வேலணைத்தீவையும், மண்டைதீவையும் ஒரு தீவாக அழைப்பதனால் தீவுப்பகுதிகளை சப்த தீவுகள் என்று அழைப்பது வழக்கம். தீவகப் பகுதியின் வரலாற்றுத் தொன்மையினையும் அதன் சிறப்பினையும் இலக்கிய, தொல்லியல் சான்றுகள் ஊடாக அறிய முடிகின்றது.

 இலங்கையின் பூர்வீக குடிகளான நாகர் இப்பிரதேசங்களில் வாழ்ந்துள்ளனர். அவர்களின் வழிபாட்டு நெறிகளில் ஒன்றாகிய நாக வழிபாடு இங்கு சிறப்புற்று இருந்தனை நயினாதீவிலும் அனலைதீவிலும் உள்ள நாக வழிபாட்டு மரபுகள் சிறப்பித்துக் காட்டுகின்றன.
இலங்கையின் பிற இடங்களைப் போன்றே தீவுகத்திலும்;; வரலாற்று வெளிச்சம் பெருங்கற்காலப் பண்பாட்டுடன் தொடங்குகின்றது. பெருங்கற்காலம் எனப்படுவது இறந்தோரை அடக்கம் செய்வதற்கு பெருங்கற்களால் ஆன ஈமச்சின்னங்களை அமைத்ததால் இக் காலம் பெருங்கற்காலக் கலாச்சாரம் எனப் பெயர் பெற்றது. தீவகற்ப இந்தியாவினுள் பெருங்கற்காலப் பண்பாட்டு வாழ்வுமுறை மஹாராஷ்டிர மாநிலத்திலுள்ள சானுரா என்ற கிராமத்தில் கி.மு 1300 காலப்பகுதியிலே தோற்றம் பெற்று விட்டது. கர்நாடக மாநிலத்தில் கி.மு 1000 அளவில் தமிழகத்தில் கி.மு 800களிலும் இப்பண்பாடு நிலவியமைக்குச் சான்றுகள் உண்டு.
 இலங்கையில் கந்தரோடை, பொம்பரிப்பு, கெடிகே ஆகிய மையங்களில் இருந்து விஞ்ஞானபூர்வான காலக்கணிப்பீடு பெருங்கற்காலப் பண்பாடு கி.மு 800இல் தோன்றி விட்டதை எடுத்துக் காட்டுகின்றது. கி.மு 800 இல் இருந்து கி.பி 3ஆம் நூற்றாண்டு வரைக்கும் இப்பெருங்கற்காலப் பண்பாட்டிற்குரிய அம்சங்கள் வளர்ச்சி பெற்றுக் காணப்படுகின்றன.
1981ல் கலாநிதி பொ. ரகுபதி அவர்களால் காரைநகரில் உள்ள சித்திரந்தையில்  பெருங்கற் பண்பாட்டுச் சின்னங்கள் அகழ்வாய்வு மூலம் வெளிக்கொண்டுவரப்பட்டன. ஆனைக்கோட்டையில் கிடைத்தவற்றை ஒத்த ஈம் அடக்கங்ளும் ஈமப் படையல்களும் காணப்பட்டன. ஈமப்படையல்களில் இரும்புக் கருவிகள் காணாப்படாவிடினும், பளிங்குக் கல்லாலான குறுணிக்கற் கருவி யொன்று கிடைத்தமை குறிப்பிடத்தக்கவையாகும். இங்கு காலத்தைக் திட்டமாகக் கணிக்ககூடிய தடயங்கள் கிடைக்கவில்லை யெனினும் மட்பாண்டவகை ஒப்பீட்டை அடிப்படையாக் கொண்டு சத்திரந்தை ஆனைக்கோட்டை பெருங்கற்கால மையத்திலும் பழமையானது. (இரகுபதி, 1983 : 9). புங்குடுதீவின் வட பகுதியிலுள்ள ஊரதீவின் வடகரையில் வட்டகற்ளாளான சிறு கிணறுகள் தென்பட்டதாக கூறப்படுகின்றது. இத்தகைய கிணறுகள் வல்லிபுரம், திருக்கேதீச்சரம் முதலிய இடங்களிலும் காணப்பட்டன. இத்தகைய கிணறுகள் பெருங்கற் கால பண்பாட்டினைச் சேர்ந்தன.
2000ஆம் ஆண்டு காலப்பகுதியில்; வேலனையின் சாட்டிப் பகுதியில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இவ் ஆய்வின் விளைவாக பெருங்கற்காலப் பண்பாட்டுக்குரிய தடயங்கள் கிடைக்கப் பெற்றன. பெருங்கற்காலப் பண்பாட்டிற்குரிய கறுப்பு. சிவப்பு மட்பாண்டங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. மீன் தூண்டில் அடையாளங்கள் இடப்பட்டும் அவை இரண்டிற்கு கீழே ராசா என வாசிக்கக்கூடிய இரு பிராமி எழுத்துப் பொறிக்கப்பட்ட மட்பாண்ட ஒடு கண்டெடுக்கப்பட்டுள்ளது. அடக்கம் செய்யப்பட்ட எலும்புகளில் ஒன்று மனித வடிவில் வெட்டப்பட்டு அதன் ஒரு பக்கம் தட்டை வடிவமைக்கப்பட்டு அதன் மேல் ஒன்பது பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதில் “பாகன்” என்ற பிராமி சொல்லும் பொறிக்கப்பட்டுள்ளது. இது தமிழ் மொழிக்கே உரிய அன் என்னும் விகுதியில் முடிவது சிறப்பாகும். எழுத்துப் பொறிக்கப்பட்ட சங்கு என்பவற்றுடன் சுடுமண் கிணறும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பெருங்கற்காலக் குடியேற்றங்கள் நெடுந்தீவிலும் ஏற்பட்டிருக்கலாம் என்பதற்கு நம்பகத்தகுந்த பல ஆதாரங்கள் கிடைத்துள்ளன. நெடுந்தீவு வடமேற்கு கடற்கரையை அண்டிய வட்டாரத்தில் பரவலாக காணப்படும் பெருங்கற்காலப் பண்பாட்டுடன் தொடர்புடைய பெருந்தொகையான மட்பாண்ட ஓடுகள், கீச்சுக்கிட்டான்கள், கைவிரல் அடையாளம் கொண்ட கூரை ஓடுகள் முதலானவை சான்றுகளாக உள்ளன. பெரியதுறை என்னும் இடத்தில் உள்ள மண்மேடுகளில் பரவலாக காணப்படும் பலவகை மட்பாண்டங்களும் கழிவிரும்புகளும் இற்றைக்கு 2000 அண்டுகளுக்கு முன்னரே கந்தரோடை, சாட்டியை ஒத்த பெருங்கற்காலக் குடியிருப்பு இருந்தனை உறுதி செய்கின்றது. இவற்றுள் கல்வட்டங்களால் அமைந்த ஒரு மேடு பெருங்கற்காலப் பண்பாட்டிற்குரிய கல்லறை எனப்படும் ஈமச்சின்னமாக இருக்கலாம். இவ்விடம் முழுமையாக ஆய்வுக்கு உட்படுத்தப்படும் போது இப்பிரதேச பூர்வீக குடிகள் பற்றிய முழுமையான தகவல்கள் கிடைக்கும்.
இலங்கையில் பிற இடங்களைப் போன்று இங்கும் பௌத்தம் பரவியிருக்கலாம். தீபவம்சம், மகாவம்சம் முதலிய இடங்களில் நாகதீபம் ஒரு முக்கியமான பௌத்த நிலையமாக கூறப்படுகின்றது. இங்கு புத்தபிரான் வந்து சென்றார் என்ற ஜதீகம் உண்டு. நாகதீபம் என்ற பதம் பரந்த கருத்திலே வட இலங்கை முழுவதையும் குறிக்குமாயினும் சிறப்பாக நயினாதீவினையே குறிக்கும்மென கருதப்படுகின்றது. பியங்குதீபம் பிரிதொரு முக்கியமான பௌத்த நிலையமாகக் கூறப்படுகின்றது. இங்கு புகழ் பெற்ற அர்ஹந்தஸ் (பௌத்தஞானிகள்) வாழ்ந்தனரெனக் குறிப்பிடப்படுகின்றது. இவ்விடயம் பற்றி வல்லிபுர பொற்சாசனத்திலும் குறிப்பு உள்ளதெனக் கருதப்படுகின்றது. இவ்விடம் புங்குடுதீவு என அடையாளம் காணப்படுகின்றது. பௌத்த ஜதீகக் கதைகளிலே காரதீப (காரை தீவு) பற்றிய குறிப்பு வருகின்றது.
குளக்கேட்ட மகாராசன், வெடியரசன் பற்றிய கதைகள் நெடுந்தீவிலும், காரைதீவிலும் அல்லிராணி பற்றிய கதைகள் அல்லைப்பிட்டியிலும் நிலவுகின்றன. இவை ஜதீகங்களாகவே திகழ்கின்றன. பல்லவர் பாண்டியரது காலத்திலேற்பட்ட ஆதிக்கப்படர்ச்சி முதலியவற்றின் தாக்கம் தீவகத்திலும் ஏற்பட்டிருக்கலாம். இதனால் காலப்போக்கில் தீவகத்திலும் பௌத்தம் மறைந்திருக்கலாம்.
சோழர் ஆட்சிக் காலத்தில் இப்பிரதேசங்கள் செல்வாக்குப் பெற்றிருந்தது. குறிப்பாக ஊர்காவற்துறை துறைமுகம் பிரசித்தி பெற்ற இடமாகக் காணப்பட்டது. ஊர்காவற்துறைக்கு அண்மையில் நாரந்தனையில் இன்று தான்தோன்றி ஈஸ்வரி ஆலயம் அமைந்துள்ள இடத்திலே சுமார் அரை நூற்றாண்டுகளுக்கு முன், கல் சேகரிக்க வெடிவைத்த போது சோழப் பேராசராகிய 1ம் ராஜராஜனின் 38 செப்பு நாணயங்கள், சேர மன்னனின் 5 வெள்ளி நாணயங்கள், பொன் மயில்களின் துண்டுகள், சிறிய அம்பாள் சிலை முதலியனவும் வேறு பொருட்களும் வெளிவந்தன. பண்னைத்துறை எனும் பெயர் சோழ நாட்டிலுள்ள பெண்ணனயாற்றுப் பகுதியிலே இருந்து வந்தோராலிடப்பட்ட தென்றும் ஜதீகம் உண்டு. புங்குடுதீவிலுள்ள சோழனோடை, சோழகன்புலன் முதலிய இடப்பெயர்கள் குறிப்பி;டப்பாலன. சோழக் காசு, பொலநறுவை, தம்பதெனிய, யாப்பகூவ, கோட்டை மன்னரின் காசுகள் தீவகத்தில் கிடைத்துள்ளன. சேது நாணயங்களும் ஜரோப்பிய நாணயங்களும் அவர்;களின் மேலாதிக்கம் நிலவியதை காட்டுகின்றன
பன்னாட்டு வணிக, பண்பாட்டுத் தொடர்புகள் தீவகத்திலும் நிலவி வந்தன. இந்தியத் தொடர்புகளை விட சீனா,கிரேக்க, உரோம, அரோபிய வர்த்தக தொடர்புகளும் நிலவியிருக்கலாம். நயினாதீவு உள்ள பாரக்கிரமபாகுவின் கற்பலகைச் சாசனம் ஊர்காவற்றுறையிலே நடைபெற்ற வெளிநாட்டு வர்த்தகம் பற்றிய தகவல்களை அறியமுடிகின்றது. கி.பி 1922இல் அல்லைப்பிட்டியிலே 179 குஜராத் பொற்காசுகள் கிடைக்கபெற்றன.
சீனத் தொடர்புகளைக் காட்டும் சான்றுகள் குறிப்பிடத்தக்கன. வேலணையின் மேற்குகரையில் உள்ள சீனன்கோயில் எனுமிடத்திலே சீனக்குடியிருப்பு ஒன்று இருந்தாக தெரிகின்றது. நயினாதீவு, நெடுந்தீவு, ஊர்காவற்துறை முதலிய இடங்களிலும் சீனச் சாடிகள் கிடைத்துள்;ளன. அல்லைப்பிட்டியிலே 1977இல் பேராசிரியர் ஜோன்ஸ் கார்வெல் நடத்திய அகழ்வாய்வின் போது சீனச்சாடிகள், மட்பாண்டங்கள் முதலியவற்றின் துண்டுகள் வெளிவந்தன. இவ்வகழ்வாய்வின் இவ்விடத்திலே பழைய இந்துக் கோயில் ஒன்று இருந்தற்கான தடயங்களும் கிடைத்துள்ளன. இவை கி;.பி 10ம் நூற்றாண்டு தொடக்கம் சில நூற்றாண்டுகளாய் நிலவிய சீனத் தொடர்புகள் குறிப்பாக வர்த்தக தொடர்புகளை எடுத்துக்காட்டுகின்றது.
தீவகத்தில் உள்ள இடப்பெயர்கள் சிலவற்றிலே சில பழைய தமிழ் வழக்காறுகளும் காணப்படுகின்றன. துருத்தி எனும் சொல் தீவையும் குறிக்கும் திருமுருகாற்றுப்படையில் இக்கருத்தில் உள்ளது. புங்குடுதீவிலே குறிக்கட்டுவானுக்கும் பிரதான தீவுக்கும் இடையேயுள்ள சிறுதீவு நடுவுத்துருத்தி என அழைக்கப்படுகின்றது. பசுத்தீவு என அழைக்கப்படும் நெடுந்தீவிருந்;தும் அருகில் உள்ள கச்ச தீவில் இருந்தும் பால், தயிர், நெய் முதலியன இராமேஸ்வரத்தில் உள்ள இராமநாதசுவாமி கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டதாகக் கூறப்படுகின்றது.
ஜரோப்பிய ஆட்சியில் தீவகப் பகுதி சிறப்புப்; பெற்ற பிரதேசமாகவே காணப்படுகின்றது. தாய் நாட்டில் உள்ள அம்சங்கள் தீவகத்திலே காணப்பட்டபடியாற் ஒல்லாந்தர் தாய் நாட்டிலுள்ள இடப்பெயர்கள் சிலவற்றை இவற்றிற்கு சூட்டினர். வேலணையினை வெய்டென் எனவும் காரைதீவினை அம்ஸ்ர்டம் எனவும் நெடுந்தீவினை டெல்வற் எனவும் பெயர் சூட்டினர்.
போர்த்துக்கீசர் ஒல்லாந்தர் ஆட்சியினை நினைவூட்டும் கோட்டைகள் நெடுந்தீவு, ஊர்காவற்றுறை , காரைநகர் முதலிய இடங்களில் இன்றும் உள்ளன. ஒல்லாந்தர் நெடுந்தீவிலே குதிரை வளர்தலை ஊக்கப்படுத்தி வந்தனர். அரோபியர், பாரசீகம் முதலிய நாடுகளில் இருந்து நல்ல இனக் குதிரைகளை இங்கு கொண்டு வந்து பெருக்கினர். ஜரோப்பியரால் இங்கு கிறிஸ்தவ, புரட்டஸ்தாந்து மதமும், நயினாதீவு, சாட்டி ஆகிய இடங்களில் முஸ்லிம் குடியிப்புகள் சில உள்ளன.

No comments:

Post a Comment

உலக நாடுகளில் பாம்பு வழிபாடு

உலக நாடுகளில் பாம்பு வழிபாடு பண்டைக் காலமுதல் உலகின் பல பாகங்களிலும் பாம்பை வழிபாடும் வழக்கம் இருந்து வருகின்றது. பண்டைய மனித இனங்கள் தோன்...